த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு
- தவெக பொறுப்பாளர்கள் 5 பேர் சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
- த.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அடுத்த கட்டமாக கூட்ட நெரிசலில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேர் இன்று சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு த.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொறுப்பாளர்கள் 5 பேரிடம் சிபிஐ 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.