தெலுங்கானாவுக்கு கார் தொழிற்சாலை: ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துவிட்டது- அன்புமணி
- தமிழகத்தைப் புறக்கணித்து தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிக்கிறது.
- முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது?
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சீனாவைச் சேர்ந்த மின் சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.
பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.
இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.
ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.