தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் 50 தொகுதிகளை குறி வைக்கும் பா.ஜ.க.

Published On 2025-06-18 13:43 IST   |   Update On 2025-06-18 13:43:00 IST
  • 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. களம் காண்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அந்தக் கட்சி விரும்புகிறது. குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணியில் 50 தொகுதிகளை பெறுவதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.

இந்த 50 இடங்களில் சுமார் 40 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீதமுள்ள 10 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு என பிரித்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அண்ணாமலையே மறுத்துள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக நான் எந்தவிதமான கடிதத்தையும் டெல்லி தலைமைக்கு அனுப்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியோடு உள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் பெறும் 50 இடங்களில் கச்சிதமான தொகுதிகளில் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதும் அவர்களின் இலக்காக உள்ளது.

அப்போதுதான் கூட்டணி ஆட்சி என்கிற கோஷத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.

அ.தி.மு.க.வும் கூட்டணி ஆட்சிக்கு எக்காலத்திலும் சம்மதிக்காது என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News