தமிழ்நாடு செய்திகள்

பீகார் தோல்விக்கு எஸ்.ஐ.ஆர். தந்திரமே காரணம்- மாணிக்கம் தாகூர் எம்.பி.

Published On 2025-11-15 12:59 IST   |   Update On 2025-11-15 12:59:00 IST
  • தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
  • காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது.

பீகார் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி இமாலய வெற்றியை ருசித்து உள்ளது.

அதே நேரம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது தவறு என்ற குரல் அங்கும் ஒலிக்கிறது.

அடுத்ததாக தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொள்ளப் போகும் கூட்டணி வியூகம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும். கடைசியில் சமாதானமாகி விடுவார்கள்.

கடந்த காலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால்தான் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

ஆனால் வருகிற தேர்தலில் 25 தொகுதிகளை ஏற்கமாட்டோம். கூடுதல் தொகுதிகளை கேட்போம். ஆட்சியிலும் பங்கு கேட்போம் என்று காங்கிரசார் குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது. இதை வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்.

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தமிழகத்தில் காங்கிரஸ் எந்த மாதிரி முடிவுகளை மேற்கொள்ளும் என்பது பற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-

பீகாரில் எஸ்.ஐ.ஆரால் பா.ஜ.க வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனவோ அங்கெல்லாம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை தந்திரமாக நீக்கி இருக்கிறார்கள்.

இதை தேர்தல் ஆணையம் சிஸ்டமேடிக்காக செய்து இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை அ.தி.மு.க. ஆதரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பல மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் நெருக்கடிகளை கொடுத்து கட்சிகளை உடைத்தது பா.ஜ.க. அதுபோல் நடந்துவிட கூடாது என்பதற்காக 2021-ல் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காக அப்போது காங்கிரஸ் தியாகம் செய்தது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

கூட்டணி முடிவு, கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு போன்ற முடிவுகளை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News