தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் காவலர் மீது தாக்குதல்- அண்ணாமலை கண்டனம்

Published On 2025-04-14 18:53 IST   |   Update On 2025-04-14 18:53:00 IST
  • வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

சென்னை வேளச்சேரியில் காவலர் காமராஜை மதுபோதையில் இருந்த தந்தை, மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

117வது வார்டு திமுக சார்பில் வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை காவலர் காமராஜ் ஓரமாக போக சொன்னதாக தெரிகிறது. இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News