தமிழ்நாடு செய்திகள்

வர்க்கப் போரின் இன்னோர் வடிவம் உன் தர்க்கப்போர்- தந்தை பெரியாருக்கு வைரமுத்து புகழ் வணக்கம்

Published On 2025-09-17 10:56 IST   |   Update On 2025-09-17 10:56:00 IST
  • தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
  • தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்.

தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

உன் தாடி முளைத்தபோது

சமூகத்துக்கு மீசை முளைத்தது

இருட்டுச் சுவர்

இடியத் தொடங்கியது

கி.மு - கி.பி பழைய கணக்கு

பெ.மு - பெ.பி புதிய கணக்கு

நூற்றாண்டுகளாய்

எங்கள் புலிகள்

ஆடுகளுக்குப்

புல்பறித்துக் கொண்டும்

பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

நகத்தில் கூர்மையும்

முகத்தில் மீசையும்

உண்டென்பதை

புலிகளுக்கு நீதான்

புலப்படுத்தினாய்

நீறுகளை ஊதி

நெருப்பை அடையாளம்காட்டிய

சுற்றுப்பயணச் சூறாவளி நீ

வர்க்கப் போரின்

இன்னோர் வடிவம்

உன் தர்க்கப்போர்

நீ சொன்ன பிறகுதான்

செருப்புத் தைத்தவன்

கையில் இருந்ததைக்

காலில் அணிந்தான்

நிர்வாணமாய்

நெசவு செய்தவன்

ஆடை சூடினான்

கலப்பையில் எழுதியவன்

காகிதத்தில் எழுதினான்

சூரியன் வந்ததும்

உடுக்கள் என்னும்

வடுக்கள் மறைவதுபோல்

உன் வருகையால்

வெள்ளை அழுக்கு

வெள்ளாவிவைத்து

வெளுக்கப்பட்டது

பழைமைவாதப் பாம்படித்ததும்

ஓலைக் குடிசைகளின்

ஒட்டடை அடித்ததும்

புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

சிலம்பம் சுற்றியதும்

உனது ஒற்றைக் கைத்தடிதான்

மூலக்கூறு பிரித்தால்

கடைசிவரை

தங்கம் தங்கம்தான்

உன் மரணத்தின்

முன் நிமிடம்வரை

நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

கருப்பு நிலக்கரி வைரமாகக்

காலம் ஆகும்

கருப்பு வண்ணம் புரிதல்பெற

இன்னும் ஒரு யுகமாகும்

புகழ் வணக்கம்.

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News