த.வெ.க. தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்வேன் என்பது ஏற்கத்தக்கதல்ல: அண்ணாமலை
- வருகிற 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
- 15 சனிக்கிழமை, ஒரு ஞாயிறு என 16 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், என்டிஏ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியது, த.வெ.க. தலைவரின் பிரசார சுற்றுப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை அளித்த பதில் பின்வருமாறு:-
கொஞ்சம் பொறுத்திருப்போம். ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீர்கள் என்றால், செட்டில் ஆவதற்கு எல்லோருக்கும் நேரம் வேண்டும். அவர்களும் வருத்தத்தில் எடுத்திருப்பார்கள். பொறுத்திருப்போம். காலம் கனிந்து வரட்டும். எல்லோரும் எங்களுடைய முயற்சியை செய்து கொண்டிருப்போம்.
ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமியின் பத்திரிகை செய்திகளை பார்த்தேன். அவர்களுடைய கருத்தை வைத்துள்ளனர். எங்கேயும் சண்டை ஏற்படுவதற்கான சூழலை நான் பார்க்கவில்லை. காலம் இருக்கிறது. பொறுத்திருப்போம். எல்லாம் சரியாகும்.
டி.டி.வி. விவகாரம் தொடர்பாக தோண்டி தோண்டி பேசுவது அழகல்ல. டிடிவி தினகரன் நல்ல தலைவர். அவருக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்காது.
அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய வேலை. நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும். முழு நேர வேலையாக இருக்க வேண்டும்.
த.வெ.க. ஒரு சீரியஸான கட்சி. திமுக-வுக்கு மாற்றான கட்சி எனச் சொல்கிறார்கள். அந்த வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். திமுக எங்களுக்கு எதிரான என்றால் களத்தில் காட்டினால் மட்டுமே மக்கள் நம்புவார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி திமுக-வுக்கு மாற்று என மக்கள் நம்புவதற்கு காரணம், அதன் தலைவர்களை எப்போதும் சந்திக்கக் கூடிய அளவில் இருக்கிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மக்களை பார்ப்பேன் என்றால், அவர்கள் அரசியலை எந்த அளவிற்கு சீரியஸாக எடுக்கிறார்கள் என மக்கள் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் வருகிற 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமை மற்றும் ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.