தமிழ்நாடு செய்திகள்

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதா?- அன்புமணி கண்டனம்

Published On 2025-07-09 11:48 IST   |   Update On 2025-07-09 11:48:00 IST
  • பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
  • பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம் என்பவர் சில நாள்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பாரிஜாதம் பணி தொடர்பாக தம்மை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகளும், ஓர் ஆசிரியரும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரே மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஆனாலும் கூட பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தான் அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்த சிக்கலில் அரசும், காவல்துறையும் இனியும் தாமதிக்காமல் பாரிஜாதத்தின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News