#PMK-வில் உரிமை கோர நிறுவனருக்கு அதிகாரம் இல்லை- அன்புமணி பதில் மனு தாக்கல்
- ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
- ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவைகளை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது, அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உரிமையியல் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'டாக்டர் ராமதாசுக்கு தற்போது 87 வயது ஆகிறது. உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களால், அவரால் கட்சி தொடர்பான நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழி நடத்துகின்றனர்.
ராமதாஸ் தன்னைத்தானே பா.ம.கவின் தலைவர் என அறிவித்துக் கொண்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. பா.ம.க.வின் நிறுவனர் என்ற அடிப்படையில் பா.ம.க. கட்சியில் ஆலோசனை வழங்கி, கட்சியின் வழிகாட்டுதலை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் கட்சியின் முடிவுகளை எடுக்க பா.ம.க.வின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. பொதுக்குழு மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுக்க உரிமை உள்ளது.
ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பா.ம.க. கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை, அதிகாரம் இல்லை. தன்னை தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்து கொண்டு விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு வருகிற 11-ந்தேதிக்குள் ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.