தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. பொறுப்பாளர்களுடன் ஆலோசனை - அன்புமணி கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏ. அருள்

Published On 2025-05-31 10:43 IST   |   Update On 2025-05-31 10:43:00 IST
  • டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
  • தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு கூட்டம் நாளை வரை நடக்க உள்ளது.

சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News