பா.ஜ.க.வுடன் கூட்டணி: அ.தி.மு.க.வுக்கு இ.பி.எஸ் செய்துள்ள மிகப்பெரிய துரோகம்- கனிமொழி எம்.பி
- அண்ணா, ஜெயலலிதா இழிவுபடுத்தியவரை அழைத்து எடப்பாடி பழனிசாமி விருந்து கொடுத்துள்ளார்.
- மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கிறது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் என்டிஏ கூட்டணி அமைத்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக- பாஜக குறித்து திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்தது அதிமுகவுக்கு செய்துள்ள் மிகப்பெரிய துரோகம். அதிமுக மட்டுமல்ல தமிழ்நாடு மக்களுக்கும் இபிஎஸ் துரோகம் இழைத்துள்ளார்.
அதிமுக- பாஜக இடையே கள்ளக் கூட்டணி இருந்தது என்பது உண்மையாகிவிட்டது. வக்பு மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு அதை நிறைவேற்றியவர்களுடன் இபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரானவர் இபிஎஸ் என்பது உறுதியாகியுள்ளது. அண்ணா, ஜெயலலிதா இழிவுபடுத்தியவரை அழைத்து எடப்பாடி பழனிசாமி விருந்து கொடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கிறது. அதிமுக தலைமையில் கூட்டணி என்பது உண்மையில் கண்துடைப்பு. கூட்டணிக்கு தலைமை என கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பில் இபிஎஸ்க்கு பேசக் கூட அனுமதி இல்லை.
அமித் ஷா கூட்டணி பற்றி அறிவிக்க எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் கூட்டணி அறிவிப்பார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்தது ஏன்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.