null
அ.தி.மு.க.– பா.ஜ.க.-வுடன் டீல் - கமலின் 'நிழல்'- யார் இந்த சந்திரசேகர்!
- சந்திரசேகர் இப்போது தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்டு நிற்பதை தி.மு.க.-வினரே விரும்பவில்லையாம்.
- தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளையையும் சந்திரசேகரே கவனித்துக்கொண்டாராம்.
மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்-ஆக உள்ளபெயர் சந்திரசேகர். இவர் வேறு யாருமில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராக இருந்தார். சில காலங்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக, மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் செலவுகளை மொத்தமாக, தான் பார்த்துக்கொள்வதாக கமலிடம் உறுதி அளித்துள்ள சந்திரசேகர், தற்போது கமலின் நிழலாகவே மாறிப்போயிருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.
யார் இந்த சந்திரசேகர்?
அனிதா டெக்ஸ் காட் என்ற திருப்பூரை மையமாக கொண்ட நிறுவனத்தின் அதிபர்தான் இந்த சந்திரசேகர். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இவரது நிறுவனத்தில் இருந்து துணிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சப்ளை ஆகிறது.
அ.தி.மு.க.- தி.மு.க.-விற்கு நெருக்கம் - எப்படி?
கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய அளவில் டெண்டர் எடுத்து பணிகளை எடுத்துச் செய்தவர் சந்திரசேகர். அதற்காக, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரை பலமாகவே கவனித்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இன்று தி.மு.க. ஆட்சியில் கோலோச்சிக்கொண்டிருக்கும் அதிகாரிகளில் முக்கியமானவருடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளையையும் சந்திரசேகரே கவனித்துக்கொண்டாராம். ஆனால், அதுதான் இன்று வரை தி.மு.க. ஆட்சிக்கு மிக முக்கிய அவப்பெயராக இருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.
சந்திரசேகர் சப்ளை செய்த பொருட்களில் வெல்லம், நெய் உள்ளிட்ட எதுவும் தரமில்லாமல் இருந்ததால், இவரது நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க பரிந்துரை செய்தும் அது நடக்காமல் போனதாம். அந்த அளவுக்கு செல்வாக்காக பவனி வருகிறார் சந்திரசேகர் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.
பா.ஜ.க.-வினரோடு சந்திரசேகரின் பந்தம்!
தமிழ்நாட்டைத் தாண்டி தன்னுடைய தொழில் வீறுநடை போட வேண்டும் என்பதால் தமிழக பா.ஜ.க.-வின் முக்கிய நிர்வாகிகள் பலருடன் இவர் மிக நெருக்கமாக இருந்ததுடன், அவர்களையும் கணக்கே பார்க்காமல் சந்திரசேகர் கவனித்தது தனி வரலாறு.
கமலிற்காக காசு வாங்கிய சந்திரசேகர்?
கடந்த 2021 தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை தடுக்கும் விதமாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து 200C-க்கு மேல் சந்திரசேகர் பணம் பெற்று கமலை தனியாக போட்டியிட வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றி பெற்றார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பெற்ற பணத்தை பிரித்து முக்கியவானர்களுக்கு செட்டில் செய்ததாகவும் மீதியை திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்ட நிலையில், அப்போதே அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது யாவரும் அறிந்ததே.
இப்போதும் கூட்டு, தி.மு.க.-விற்கு வேட்டு?
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-விடம் பணம் பெற்று கமலை தனியாக நிற்க வைத்து தி.மு.க.-விற்கு நெருக்கடி கொடுக்க வைத்த சந்திரசேகர் இப்போது தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்டு நிற்பதை தி.மு.க.-வினரே விரும்பவில்லையாம்.
நம்மிடம் சீட் வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்லாக சந்திரசேகர் இருப்பார் என்பதால் அவரை கமல் ஒதுக்கி வைத்தால்தான் மற்ற நிர்வாகிகள் மீது தி.மு.க.-வினருக்கு நம்பிக்கை வரும் என்ற பேச்சு எழுந்துள்ளதாம் அறிவாலயத்தில்.
இப்போதும் கூட அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்து அதற்காக பணியாற்றுவதாகவும் அதற்கு தேவையான இனிப்பு பெட்டிகளை இப்போதே சந்திரசேகர் தயார் செய்துக்கொண்டிருப்பதாகவும் அங்கலாய்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் அரசல், புரசலாக.
தன்னுடைய தொழிலை விரிவுப்படுத்த தி.மு.க.-வை விட அ.தி.மு.க. ஆட்சியே சரியாக இருக்கும் என்று சந்திரசேகர் கருதுவதாகவும், எனவே அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் கிசுகிசுக்கிறார்கள் மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில்.