தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் 'நந்தினி' பெயரில் கலப்பட நெய் தயாரிப்பு - 4 பேரை கைது செய்த கர்நாடகா போலீசார்

Published On 2025-11-18 13:34 IST   |   Update On 2025-11-18 13:34:00 IST
  • கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்

கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News