எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு
- முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- அண்ணா படத்திற்கு செங்கோட்டையன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்குமண்டல அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக அவர் கோபியில் இருந்து கார் மூலமாக சிறுமுகை, ஆலாங்கொம்பு வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அவருக்கு சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆலாங்கொம்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.
இந்த சிலை அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டது என்பதால் அ.தி.மு.க.வினர் செங்கோட்டையன் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்கூட்டியே சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர்.
இதையடுத்து செங்கோட்டையன் மேட்டுப்பாளையம் வந்தார். மேட்டுப்பாளையம் வந்ததும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கட்சியினருடன் சென்றார்.
ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வாங்காததால், அண்ணா சிலையும் பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு செங்கோட்டையன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.