வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஆதவ் அர்ஜுனா
- நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
- ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்குரிமையை தடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாம் நதி போல பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
நமது செயல்பாடுகள் மூலம் தி.மு.க.வினர் இன்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. ஏன் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை. கிராமப்புறங்களில் காலையில் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் இரவில் தான் வீடுகளுக்கு வருவார்கள். இதுபோன்ற நபர்களிடம் எப்படி விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்வது என்கிற சிக்கல்கள் உள்ளன.
இது போன்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாம் இப்போது வைத்திருக்கும் வாக்காளர் அட்டை இனி செல்லுபடியாகாது. அது போன்ற சூழல் ஏற்படும்போது ஆதார் அட்டையும் செல்லுபடியாகாமல் போகலாம். பின்னர் இந்திய குடிமகனா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புவார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று இந்தியாவிலேயே இந்த தலைவரும் செய்யாத செயலை நேற்று வெளியிட்ட எஸ்ஐஆர் தொடர்பான வீடியோ மூலமாக நமது தலைவர் விஜய் செய்து உள்ளார்.
நேற்று இரவு 12 மணிக்குள் மூன்று கோடி பேர் அதனை பார்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோதும் அவரிடம் எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்கள். ஆனால் அவர் மக்கள் ஆதரவை பெற்று முதலமைச்சரானார்.
தற்போது நம்மை பார்த்தும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஆனால் நமது தலைவரோ மக்களையே கட்டமைப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இளம் வாக்காளர்கள் முதல் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் நாம் அனைவருமே வீடு வீடாக செல்ல வேண்டும்.
இப்படி அனைவரது வாக்குரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதனை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் 2026 தேர்தலில் நமது தலைவர் தான் முதலமைச்சராக அமருவார்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.