தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வை ஏன் எதிர்க்கவில்லை? - த.வெ.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

Published On 2025-05-21 07:37 IST   |   Update On 2025-05-21 09:44:00 IST
  • சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கட்சியின் மாநாட்டிலேயே எங்கள் நிலைபாட்டை தெளிவாக அறிவித்துவிட்டோம்.
  • டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்படும்.

சென்னை:

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் (தேர்தல் மேலாண்மை) ஆதவ் அர்ஜூனா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எதிர்க்கட்சியாக இருந்தபோது சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் அமைப்பை காப்போம் என்று உறுதியாக இருந்து போராட்டம் நடத்திய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதேபோன்ற நிலையில் இல்லை. வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். ஆனால், அது கண்துடைப்பாகவே இருக்கிறது. வக்பு வாரிய சட்டத்திற்கு எதிரான வழக்கில் தன்னை ஏன் தமிழக அரசு இணைத்துக் கொள்ளவில்லை?. கேரள அரசை போல, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உண்மையாக குரல் கொடுக்க வேண்டும்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குரல் கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும்.

இதை வாக்கு வங்கி ரீதியாக தமிழக வெற்றிக்கழகம் அணுகவில்லை. வடகாடு விவகாரத்தில் திருமாவளவன் போலீஸ் துறையை விமர்சித்தார். போராட்டம் முடித்த பிறகு தி.மு.க. அரசு சமூக நீதிக்கான அரசு என்று மாற்றி பேசுகிறார்.

சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கட்சியின் மாநாட்டிலேயே எங்கள் நிலைபாட்டை தெளிவாக அறிவித்துவிட்டோம். அரசியல் எதிரியான தி.மு.க.வுடனும், கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடனும் கூட்டணி கிடையாது என்பது எங்கள் நிலைப்பாடு. அ.தி.மு.க.வை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள்.

எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சியை ஏன் எதிர்க்க வேண்டும்?. அந்த கட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க.வை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததும், தமிழக வெற்றிக்கழகம் இந்த கூட்டணி தவறானது என தன்னுடைய நிலைபாட்டை அறிவித்துள்ளது. விஜய் வருகை உண்மையான அரசியலை உருவாக்கும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News