2026 சட்டசபை தேர்தல் பணிகள் - ஆலோசனை வழங்கிய முதலமைச்சர்
- கட்சிக்கு இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க. வியூகம் வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற பொதுக் குழுவில் தி.மு.க.வுக்கு கூடுதலாக 2 சார்பு அணிகள் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார். அதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமின்றி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் கூறி இருந்தார்.
இதை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளதால் கழக ஆட்சியின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் தொடர்ந்து எடுத்து சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொருவரின் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்திருந்தாலும் அதுபோதாது. இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை திறம்பட செய்து முடித்தது போல் இந்த முறையும் வீடு வீடாக சென்று கழகத்துக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்த பணிகளை இப்போதே தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.