தமிழ்நாடு செய்திகள்

2025 REWIND: மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பும்

Published On 2025-12-10 11:00 IST   |   Update On 2025-12-10 11:01:00 IST
  • தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது.

மும்மொழிக் கொள்கை என்பது 1968-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்விசார் கொள்கையாகும். இது இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி (முன்னுரிமை இந்தி பேசாத மாநில மொழி) ஆகிய மூன்று மொழிகளைக் கற்பதை வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கை, இந்திய மாநிலங்கள் தங்கள் மொழிக் கல்வி முறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.

இந்திய மொழிகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்ப்பதும், மாணவர்களுக்கு பல மொழிகளைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதும் மும்மொழிக் கொள்கையின் நோக்கமாகும்.

இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.

 

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

 மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழ்நாடு அரசுடன்) இருக்கின்றன.

 

அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.

பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' என்ற இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கிறது. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாகத் திணிக்கப்படுமோ? என்ற சந்தேகம் தமிழக கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இது செயல்படுத்தப்படவில்லை, மாறாக இருமொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.

பெரும் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மும்மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக்கொள்கையே கற்கிறார்கள். போட்டித் தேர்வுகள் என்று வரும்போது தனியார் பள்ளிகளில் படிப்போர் முதலிடத்தை பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கியும் விடுகிறார்கள். ஓர் அரசே இதுபோன்ற சமுதாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

Tags:    

Similar News