தமிழ்நாடு

ஜாபர் சாதிக்கை போலீசார் கண்காணிக்க தவறியது ஏன்? அண்ணாமலை

Published On 2024-03-04 05:11 GMT   |   Update On 2024-03-04 11:13 GMT
  • இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
  • ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

கோவை:

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போதைப்பொருள் இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன.

இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜாபர் சாதிக் உள்பட 4 பேர் சின்தடிக் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர்.

அப்போது 20 கிலோவுக்காக கைது செய்யப்பட்ட அவர் 11 ஆண்டுகள் கழித்து 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருளை கையாளும் வகையில் விஸ்வரூபமாக உயர்ந்துள்ளார்.

ஒருமுறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டால் போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவரை போலீசாரும் தமிழக அரசும் கண்காணிக்கவில்லை. இதில் போலீசார் தோற்றுவிட்டனர்.

ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

ஜாபர் சாதிக் எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார். முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் என எல்லோருடனும் உள்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இதனை ஒரு சமுதாய இயக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும்.

பா.ஜனதா இதற்காக ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது. வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் தென்காசியில் போதைப்பொருளுக்கு எதிரான நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது கட்சிக்கு சின்னம் வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் விண்ணப்பிக்க தவறிவிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அவருக்கு சின்னம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னம் கிடைக்கவில்லை. இதற்கும் எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சீமான் முதலில் மோடியை திட்டினார். தற்போது அண்ணாமலையை திட்ட தொடங்கி உள்ளார்.

புதுச்சேரியில் பா.ஜனதா சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா சுவரொட்டிகளில் மற்ற தலைவர்களின் படங்கள் இருக்காது.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் எனக்கு பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News