தமிழ்நாடு

சொத்துக்கள் முடக்கப்படவில்லை - உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மறுப்பு!

Published On 2023-05-30 02:13 GMT   |   Update On 2023-05-30 02:13 GMT
  • சோதனையின் போது ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
  • உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகை முடக்கப்பட்டது.

இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஓட்டல் மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதில் பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிறுவனர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

"உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கென்று எவ்விதமான அசையா சொத்துக்களும் கிடையாது."

"அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ரூ. 36.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ. 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்." 

Tags:    

Similar News