சோதனை செய்த போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி- போலீசார் விசாரணை
- கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
- திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் போலீசாரை கைதி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகர் கடந்த ஒரு வருட காலமாக கைதியாக உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை உதவி அலுவலர் மணிகண்டனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன்விரோ தம் காரணமாக எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறை காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறி அவரையும் கைது செய்தனர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் எண்ணூர் தனசேகர் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக எண்ணூர் தனசேகரன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் மாலை மீண்டும் சிறை வளாகத்திற்கு எண்ணூர் தனசேகரனை போலீசார் அழைத்து வந்தனர். இதனையடுத்து இன்று காலை கடலூர் மத்திய சிறை அலுவலர் தமிழ்மாறன் உத்தரவின் பேரில் சிறப்பு சோதனை குழுவில் 2-ம் நிலை காவலராக பணிபுரியும் பிரித்விராஜ் (வயது 28) கைதி எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டுள்ள வெளிச்சிறை எண் 1-க்கு சென்று செல்போன் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை செய்தார்.
அப்போது கைதி எண்ணூர் தனசேகர், காவலர் பிரித்விராஜிடம் நான் இருக்கும் அறையை யாரும் சோதனை செய்யக் கூடாது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலர்கள் பிரித்திவிராஜை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.