திருக்கழுக்குன்றம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை
- கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை அருகே உள்ள சின்ன இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது.25) திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவர் பணி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். சின்ன இரும்பேட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது இருளில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் கத்தி,அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கன்னியப்பனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற கும்பல் கன்னியப்பனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில், தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கன்னியப்பன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்?கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்ததா? அல்லது பணத்தகராறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக கன்னியப்பனின் நண்ப ர்கள், உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கன்னியப்பன் கடைசியாகயாரிடம் பேசினார் என்று அவரது செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர் தினந்தோறும் பணி முடிந்து வருவதை நோட்ட மிட்டு மர்ம கும்பல் தீர்த்து கட்டி உள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார்ஆய்வு செய்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.