தமிழ்நாடு

கூடலூரில் நாளை மறுநாள் ராகுல் காந்தி பாதயாத்திரை- பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்

Update: 2022-09-27 04:51 GMT
  • கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார்.
  • கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார்.

ஊட்டி:

பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார்.

11-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார்.

அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் ராகுல்காந்தி கோழிப்பாலத்தில் இருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் பாதயாத்திரையாக வருகிறார்கள்.

கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து அன்று இரவு அவர் கூடலூரில் உள்ள பள்ளி மைதானத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 30-ந்தேதி கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு தனது பாதயாத்திரையை தொடங்க உள்ளார்.

கூடலூர் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி வன கிராமங்களுக்குள் அவர்கள் புகுந்து வருகின்றனர்.

தற்போது ராகுல்காந்தி கூடலூர் வருவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதையொட்டி கூடலூரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கூடலூர் வந்தார்.

பின்னர் கூடலூரில் ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இருந்து தொண்டர்களை அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு கொடுப்பது, பாத யாத்திரையில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் பொதுக்கூட்டம் நடக்க உள்ள புதிய பஸ்நிலைய பகுதிக்கு சென்றார். அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி மற்றும் இதர பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News