தமிழ்நாடு

மகனுக்கு பெண் தர மறுப்பதாக கூறி ப.சிதம்பரத்திடம் பெண் வாக்குவாதம்

Published On 2024-04-03 05:35 GMT   |   Update On 2024-04-03 05:35 GMT
  • காங்கிரஸ் நிர்வாகிகள் சமரசம் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
  • மறுநாள் அதே பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தார்.

காரைக்குடி:

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ப. சிதம்பரம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ப.சிதம்பரம் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி அவர் காரைக்குடி அருகே மித்ரா வயல் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து திடீரென ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் கூறினர். அதோடு மித்ராவயலில் செயல்படும் டாஸ்மாக் கடையால் இப்பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமை யாகும் சூழல் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.

குறிப்பாக கூட்டத்தில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ப.சிதம்பரத்திடம் 'ஐயா எங்கள் பகுதியில் மதுக்கடைகள் இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மதுக்கடை இருப்பதால் என் மகனுக்கு யாரும் பெண் தர மறுக்கின்றனர். எனவே அதனை அகற்ற வேண்டும்'என கோரிக்கை வைத்ததோடு வாக்குவாதமும் செய்தார்.

சிதம்பரத்திடம் மதுக்கடையை மூட வேண்டும் என பெண் வாக்குவாதம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே காங்கிரஸ் நிர்வாகிகள் சமரசம் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் மறுநாள் அதே பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த பெண் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். மேலும் மதுகடை அகற்றுதல் கோரிக்கை தொடர்பாகவும், இதுகுறித்து ப.சிதம்பரத்திடம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன் என அந்த பெண், அ.தி.மு.க. வேட்பாளரிடம் கூறினார். அந்த பெண்ணின் இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News