தமிழ்நாடு செய்திகள்

சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு

Published On 2023-12-02 10:34 IST   |   Update On 2023-12-02 11:32:00 IST
  • வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.
  • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாக இடைக்கால ஏற்பாடாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பிறகு சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.

Tags:    

Similar News