தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2023-12-01 08:04 GMT   |   Update On 2023-12-01 08:04 GMT
  • வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சாட்சி விசாரணையை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.
  • எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

சென்னை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், அவருக்கு பேட்டிக் கொடுத்த கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், இவர்களிடம் இருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடும் கேட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சாட்சி விசாரணையை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், அவர் இதில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் சாட்சியம் அளிக்க ஐகோர்ட்டு வளாகத்துக்குள் வந்தால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால், சாட்சியத்தை வீட்டில் வந்து பதிவு செய்ய வக்கீல் ஆணையராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வக்கீல் ஆணையராக வக்கீல் கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும். பாதுகாப்பு காரணமாக இதுபோல நேரில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது. அதுவும் சென்னை ஐகோர்ட் வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். அதனால், எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News