தமிழ்நாடு செய்திகள்

கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் தோற்கடிக்க பா.ஜ.க. தயார்- எஸ்.ஜி. சூர்யா

Published On 2024-03-06 15:28 IST   |   Update On 2024-03-06 15:29:00 IST
  • கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானது.
  • அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை:

கோவை பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை ராம்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, முன்னாள் எம்.பி. கார்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து எஸ்.ஜி. சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் பாரதிய ஜனதாவினர் உற்சாகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.


கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானது. கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறக் கூடிய தொகுதி இது.

எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் அவரை தோற்கடிக்க பா.ஜ.க. தயாராக உள்ளது.

பா.ஜ.க.விற்கு ஓட்டு போட்டால் செல்லாத ஓட்டுக்கு சமம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். செல்லாத ஓட்டாக இருந்த பா.ஜ.க. தான் கடந்த 2014 தேர்தலில் 3-வது அணி அமைத்து 20 சதவீத வாக்குகளை பெற்றது. எனவே யார் செல்லாத ஓட்டு என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News