தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் 5-ந்தேதிவரை கனரக வாகனங்களுக்கு தடை: நீலகிரி மாவட்ட போலீசார் அறிவிப்பு

Published On 2025-12-26 10:00 IST   |   Update On 2025-12-26 10:00:00 IST
  • அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
  • புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு தினம், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து புறப்படும் வாகனங்கள் மேட்டுப்பாளையத்துக்கும் செல்ல வேண்டும்.

மேலும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற ஜனவரி 5-ந்தேதிவரை அமலில் இருக்கும்.

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ் தவிர மற்ற அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன் மற்றும் மேக்சி-கேப் வாகனங்கள், எச்.பி.எப். கோல்ப்லிங்ஸ் சாலையில் நிறுத்தப்படும். அங்கு இருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுலா பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.

மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், தலைகுந்தாமட்டம் கோழிப்பண்ணை புதுமந்து வழியாக ஸ்டிபன்ஸ் சர்ச் வந்தடையும். புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் தவிர அனைத்து சுற்றுலா வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.

கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டி வந்தடையலாம்.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சேரிங்கிராஸ், பிளாக் பிரிட்ஜ் வழியாக கோத்தகிரி நோக்கி திருப்பி விடப்படும்.

அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோலியம், கியாஸ் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களுக்கும் ஜனவரி 5-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஊட்டி நகருக்குள் நுழைய அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News