ஜனவரி 20-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு
- 2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
- தமிழ்நாடு சட்டசபை கூட்டம் மரபுகளுடன் நடைபெறும்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 20-ந்தேதி கூட்டுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அன்றைய தினம் (20-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டசபை தொடங்கும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நிருபர்கள், 2025-ம் ஆண்டு கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில் தமிழக சட்டமன்றத்தின் மரபு எதுவும் மீறப்படாது. அதனை கவர்னர் ஆர்.என்.ரவி மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி வந்ததில் இருந்து சட்டசபையில் கவர்னர் உரை சர்ச்சையில்தான் முடிந்து உள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை வாசிக்காமல் தன்னுடைய கருத்துக்களை சேர்த்து பேசினார்.
குறிப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்காதது ஆளும் தரப்பை ஆவேசப்படுத்தி கவர்னருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அவர் முன்னிலையிலேயே வாசிக்க வழி வகுத்தது. அப்போது தேசிய கீதம் இசைக்கும் முன்பே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.
அதே போல் கடந்த 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் போதும், தமிழ்நாடு அரசு அளித்த உரையை வாசிப்பதை தவிர்த்த கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்து விட்டு உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு உருவானது.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையை தமிழில் வாசித்தார். மத்திய அரசை விமர்சித்தும் மாநில அரசை பாராட்டியும் இருந்த உரையை கவர்னர் வாசித்ததாக கருதி அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அப்போது அறிவித்தார்.
இதே போல் 2025-ம் ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் சட்டசபை தொடங்கிய போது சட்டசபையில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில், இது தொடர்பாக ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
அந்த பதிவில் தமிழக சட்டப் பேரவையில் இன்று மீண்டும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமைகளில் ஒன்று.
ஆனால் கவர்னர் சட்டசபைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடுமாறு வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
அரசியலமைப்பு சட்டத்தையும், தேசிய கீதத்தையும் அவமதிக்கும் நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்க கூடாது என்பதற்காக கவர்னர் மிகுந்த வேதனையுடன் அவையை விட்டு வெளியேறினார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கவர்னருக்கும்-அரசுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியான சர்ச்சைகளில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? அல்லது ஏதாவது கருத்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சட்டசபை கூட்டம் தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப தயாராக உள்ளன. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து தக்க பதில்கள் அளிக்கப்படும் என்பதால் சட்டசபை கூட்டத்தில் பரபரப்பு விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.