தமிழ்நாடு செய்திகள்

சின்னமனூரில் குடும்ப பிரச்சனையில் கணவன்-மனைவி தற்கொலை

Published On 2023-08-28 10:03 IST   |   Update On 2023-08-28 10:03:00 IST
  • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
  • ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News