தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி-அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் அவதூறு வழக்கு

Published On 2024-03-14 07:59 GMT   |   Update On 2024-03-14 07:59 GMT
  • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
  • போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

சென்னை:

தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

ஜாபர் சாதிக்குடன் சினிமா, அரசியல் வட்டாரத்தில் பலர் நெருக்கமாக இருந்திருப்பதாக கூறியிருக்கும் அவர்கள் அதில் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்காக அழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது இருவரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

சென்னையில் கடந்த 8-ந்தேதி பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருட்களை தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறி விட்டார் என்றும் எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் தேவராஜன் சென்னை மாநகர குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரும் பேசியுள்ளனர். எனவே அவர்கள் மீது கிரிமினல் மற்றும் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News