தமிழ்நாடு செய்திகள்

பா.ஜனதாவின் ரகசிய சமரச முயற்சி தோல்வி: மீண்டும் கூட்டணி சேரக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதி

Published On 2023-09-29 13:55 IST   |   Update On 2023-09-29 14:05:00 IST
  • பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
  • கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை:

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வெளிப்படையாக எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமலேயே உள்ளனர்.

அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி விவகாரம் தொடர்பாக டெல்லி தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று மட்டும் தெரிவித்தார். அவரும் வேறு எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதை பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டணி இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மேலிட தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் மேலிட தலைவர் ஒருவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள். மனக்கசப்புகளை மறந்து மீண்டும் கூட்டணி அமைத்து செயல்படலாம் என்று அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

தேவைப்பட்டால் நானே சென்னைக்கு வருகிறேன். நேரில் அமர்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

டெல்லி மேலிட தலைவரின் இந்த பேச்சை கவனமுடன் கேட்டுக்கொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அதனை அப்படியே எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து... அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்துள்ளார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி வைக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே அதுபற்றி எல்லாம் பேச வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியிருப்பதாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி இப்படி தெரிவித்ததை தொடர்ந்தே முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டணி முறிவு தொடர்பாக நேற்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பயனும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினர் எங்கள் முதுகில் சவாரி செய்து பயணிப்பதால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாங்கள் இழந்ததுதான் மிச்சம். இதுவே தேர்தல் தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்துதான் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்து உள்ளோம் என்றார்.

பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது.

Tags:    

Similar News