தமிழ்நாடு

அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம் - 100 பேர் கைது

Published On 2023-09-11 07:36 GMT   |   Update On 2023-09-11 07:36 GMT
  • பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
  • முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென்று புதுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் வினோத், சுரேஷ், பிச்சைப்பிள்ளை, மேகநாதன், மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன், ஸ்ரீதர், பிரபு மற்றும் நிர்வாகிகள் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரண்டனர்.

பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை. ஆகையால் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நின்று கோஷம் எழுப்பி விட்டு செல்கிறோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அதற்கும் போலீசார் அனுமதி அளிக்காததால் ஒரு சில பா.ஜ.க.வினர் தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் எதிராக கண்டனம் கோஷம் எழுப்பினர்.

போலீசார் அனுமதி வழங்கவிட்டாலும் எங்கள் முற்றுகை போராட்டம் தொடரும் என கூறிக்கொண்டு இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு அவசர அவசரமாக சென்று தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதில் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

மேலும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென்று புதுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகள் 100 பேரை கைது செய்தனர். அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். பா.ஜ.க.வினரின் போராட்டத்தில் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News