தமிழ்நாடு செய்திகள்

ஓய்வு, தூக்கத்தை மறந்து போலீஸ் அதிகாரி பாணியில் தேர்தல் களத்தில் அண்ணாமலை

Published On 2024-04-08 09:23 IST   |   Update On 2024-04-08 09:23:00 IST
  • அண்ணாமலையை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று பல முனைகளில் இருந்து அஸ்திரம் வீசப்படுகிறது
  • சரியான நேரத்துக்கு பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை பகல் 12 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

அண்ணாமலையை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று பல முனைகளில் இருந்து அஸ்திரம் வீசப்படுகிறது. அத்தனையையும் தனக்கே உரித்தான பாணியில் எதிர்கெண்டு களத்தில் நிற்கிறார்.

அண்ணாமலையின் தினசரி செயல்பாடுகள் பற்றி அவருடன் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்கள்.

அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் ரெடியாகி கீழே வந்து விடுகிறார். உதவியாளர்களை அழைத்து அன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி பேசுகிறார்.

அதன் பிறகு தன்னை தேடி காத்திருக்கும் நிர்வாகிகளை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து சரியாக 7 மணிக்கெல்லாம் பிரசாரம் தொடங்கும் இடத்துக்கு சென்று விடுகிறார். சரியான நேரத்துக்கு பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை பகல் 12 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

உணவு இடைவேளையில் தொண்டர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை ஓய்வு எடுப்பதில்லை. அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அமைப்புகள், நலச்சங்கங்கள் பற்றி முன் கூட்டியே தகவல் சேகரித்து வைத்திருக்கிறார்.

மதியம் ஓய்வு நேரத்தில் அவர்களை நேரில் சென்று சந்தித்து பேசுகிறார். பின்னர் மாலையில் தொண்டர்களுடன் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார்.


மாலையில் பிரசாரத்தை முடித்து விட்டு இரவில் தங்குமிடம் வருகிறார். அதன் பிறகுதான் முக்கிய ஆலோசனைகள் தொடர்கிறது. பிரசாரத்தை தினமும் கண்காணித்து வரும் குழுவினரை அழைத்து அன்றைய பிரசாரம் எப்படி இருந்தது? மக்களிடம் வரவேற்பு பெற்றதா? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது பற்றி விவாதிக்கிறார்.

அதன் பிறகு மறுநாள் பிரசாரம் எப்படி அமைய வேண்டும், வாக்காளர்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் செயல்பட வேண்டிய விதம் பற்றி அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கிறார்.

தொடர்ந்து கீழ்மட்டம் வரையிலான நிர்வாகிகளை அழைத்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் பா.ஜனதாவை பற்றிய பேச்சுக்கள். அதற்கான பதிலடிகள் பற்றி அவர்களிடம் விளக்குகிறார்.

இந்த நள்ளிரவு ஆலோசனை முடியவே ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகு தூங்க செல்கிறார். அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு மீண்டும் 5 மணிக்கு தயாராகி விடுகிறார். ஏற்கனவே 24x7 என்ற ரீதியில் போலீஸ் பணியில் இருந்ததால் அவருக்கு நேரம், காலம் பிரச்சனை இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாகவே களத்தை கலக்குகிறார்.

பிரசாரத்தின் போது பருக, சாப்பிட என்று தனியாக எதுவும் எடுத்து செல்வதில்லை. இடைஇடையே குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பருகுவார். சாப்பாடு நிர்வாகிகள் வீட்டில்தான்.

தினசரி யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. இப்போது அதற்கான நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் எப்போதாவது சிறிது நேரம் ஓய்வு கிடைத்தால் அப்போது சிறிது உடற்பயிற்சி செய்வார்.

உழைப்பு.... உழைப்பு... அதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.

Tags:    

Similar News