தமிழ்நாடு

7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- -அன்புமணி கோரிக்கை

Published On 2023-05-31 07:30 GMT   |   Update On 2023-05-31 07:30 GMT
  • காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
  • குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும்.

24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News