தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விவாதிக்க அ.தி.மு.க தயாரா?- அண்ணாமலை கேள்வி

Published On 2024-03-27 09:59 GMT   |   Update On 2024-03-27 09:59 GMT
  • பா.ஜ.க கூட்டத்திற்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
  • கோவை மக்கள் எனக்காக தாமரை சின்னத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பார்கள் என நம்புகிறேன்.

கோவை:

கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மாற்றம் வருவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க கூட்டத்திற்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து பா.ஜ.கவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 60 சதவீத வாக்குகளை பெற்று பா.ஜ.க வெற்றி பெறும்.

நான் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டாலும் மாநில தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளேன்.

இதனால் என்னால் கோவை பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் கோவை மக்கள் எனக்காக தாமரை சின்னத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பார்கள் என நம்புகிறேன்.


கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தான் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் அவர்கள், மத்திய அரசு கொடுத்த நிதிகளையும் சரியாக கையாளவில்லை.

இது தொடர்பாக அவர்களிடம் 10 கேள்விகளை நான் தருகிறேன். அதுகுறித்து விவாதம் செய்ய தயார் என்றால் அவர்களை என்னுடன் உட்கார வையுங்கள். ஸ்மார்ட் சிட்டிக்காக எத்தனை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. யாருக்கெல்லாம் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது என அவர்கள் சொல்லட்டும்.

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தற்போது 2 கட்சியினரும் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர்.

வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் தி.மு.க.வினர் மூட்டை, மூட்டையாக பணத்துடன் இறங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News