தமிழ்நாடு செய்திகள்

அவதூறு பேச்சு புகார்: அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

Published On 2024-07-09 13:28 IST   |   Update On 2024-07-09 13:28:00 IST
  • அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
  • நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் போலே பாபா இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் குழு அமைத்து அவரை பிடிப்பார்களா? காமராஜர் பிறந்த நாளை வருகிற 15-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாட இருக்கிறோம்.

அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார். இது என்ன நாகரிகம்? என்னை சமூக விரோதி, ரவுடி என்றும் கூறி அவதூறாக பேசியுள்ளார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருகிறார். அதிகாரம் எல்லாம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இவ்வாறு அவர் பேசுகிறாரா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளார். அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்? என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும்.

நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் நாகரிகம் கருதி இதை வேண்டாம் என்று கருதுகிறேன். என்னை அவதூறாக பேசியதற்காக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News