தமிழ்நாடு

தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி மக்கள் தலைமையில்தான் எனது மகன் திருமணம் நடைபெறும்

Published On 2024-04-15 05:12 GMT   |   Update On 2024-04-15 05:12 GMT
  • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
  • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

சிவகாசி:

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

இவர் அவர் பேசினார்.

Tags:    

Similar News