பிரதமர் மோடி 27-ந்தேதி தமிழகம் வருகை: அண்ணாமலை
- பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு என வாழ்த்துகள்.
சென்னை:
டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற பா,ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விமானத்தில் சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
டெல்லியில் 2 நாள் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2047-இலக்கு வளர்ச்சி அடைந்த பாரதம். எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் ஆகிய 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு தீர்மானமாக ராமர் கோவில் கட்டிட திறப்புக்கு சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நன்றி சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு என வாழ்த்துகள். அவரது பணி சிறக்கட்டும்.
டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 11 ஆயிரத்து 700 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். உணவு இடைவெளியில் டீ சாப்பிடுவதற்கு கூப்பிட்டார்கள். அப்போது நீங்கள் எங்களுடன் வந்து அமர வேண்டும் என்று கேட்டதால் அவர்களுடன் தரையில் அமர்ந்து பாரத் மண்டபத்தில் பிரதமர் பேசிய உரையை கேட்டேன்.
பா.ஜனதாவில் இது சாதாரணம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் அமரலாம். பிரதமர் மோடியிடம் நேரடியாக சென்று பேசலாம். அருகில் அமர்ந்து சாப்பிடலாம். நானும் சாதாரண தொண்டன் தான்.
2024 தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட திருமாவளவன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சப்பக்கட்டு கட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.