தமிழ்நாடு

எங்களுக்கு பிரசாரம் செய்வதில் கவர்னருடன் பிரதமரும் சேர்ந்துள்ளார்: மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-20 05:54 GMT   |   Update On 2024-03-20 09:34 GMT
  • தோல்வி பயம் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.
  • திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.

சென்னை:

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்வதால் தி.மு.க.வுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ளாரே?

யாருக்கு காய்ச்சல் வந்துள்ளது என்று எங்கள் பொருளாளர் டி.ஆர்.பாலு தெளிவாக பதில் கூறி இருக்கிறார். அவருக்கு தோல்வி பயம் வருகிற காரணத்தலே அடிக்கடி வருகிறார். பிரதமர் வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வரும் பாரத பிரதமர், மழை வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறதே? விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொது தொகுதி ஏன் வழங்கப்படவில்லை?

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரைக்கும், அவர்கள் கேட்க உரிமை உண்டு. அதற்காக தான் குழு அமைத்திருந்தோம். அந்த குழுவில் பேசி விவாதித்து பின்னர் திருப்தி அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய அளவில் உள்ள கட்சி. மற்ற மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து விட்டு தமிழ்நாட்டில் இங்கு பேசுவதற்கு கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதையும் உட்கார்ந்து சுமூகமாக பேசி தீர்த்துள்ளோம். அதுவும் பொறுமையாக முடித்துள்ளோம். அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு முடிக்கவில்லை.

பாஜக வளர்ந்து வருவது உண்மையா?

நீங்களே உண்மையா என்று கூறுகிறீர்கள். நான் என்ன சொல்ல...

திமுகவை கார்னர் செய்வதை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

எங்கள் பிரசாரத்தின் மூலம் எதிர்கொள்வோம். ஏற்கனவே இருக்கும் கவர்னரே போதும் எங்களுக்கு பிரசாரம் செய்வதற்கு. இப்போது பிரதமரும் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியை தேடி தருவார்கள் என்பது உண்மை.

வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாக பாஜக கூறுவது?

இது குடும்ப கட்சி. திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப பாச உணர்வோடு அண்ணா, தலைவர் கருணாநிதி ஆரம்பித்து வைத்தது.

திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.

பாஜக 2 இடத்தை பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது பற்றி?

பாஜக வளர்ந்து வருவதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்பு தெரியும். யார் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரியும்.

தேர்தல் அறிக்கை மத்திய அரசு திட்டங்கள் போல் உள்ளதே?

எங்கள் கூட்டணி தான் மேல வரப்போகிறது. அந்த தைரியத்தில்தான் கொடுத்திருக்கிறேன்.

பிரதமர் வேட்பாளராக உங்கள் மனசாட்சிபடி யாரை முன்நிறுத்துவீர்கள்?

இந்தியா கூட்டணி வேட்பாளரை முன் நிறுத்துவேன் என்று கூறினார்.

Tags:    

Similar News