தமிழ்நாடு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை ஆதரித்தவர் கருணாநிதி: தந்தைக்கு எதிராக செயல்படலாமா? அண்ணாமலை

Published On 2024-01-28 05:32 GMT   |   Update On 2024-01-28 05:34 GMT
  • சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.
  • தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம், ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்போம் என்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.

தமிழக மக்களுக்காகப் பேசாமல், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன்? வேங்கைவயல் சம்பவம் நடந்து 14 மாதங்கள் ஆகியும், இன்று வரை குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை. தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்கொடுமைகள் பரவலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்துவிட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திருமாவளவன்.

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று பா.ஜ.க 25 ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் திருமாவளவன். பா.ஜ.க.வுக்கு முன்பே ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி.

ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல் படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன் என்று நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம், பக்கம் 273-ல் கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். அவர் எழுதியதை அவரது மகனே படித்ததில்லை எனத் தெரிகிறது.

மத்தியில் உள்ள 76 அமைச்சர்களின் பட்டியலில் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

மத்திய அரசின் 76 அமைச்சர்களில், 16 சதவீதம் அமைச்சர்கள், அதாவது 12 பேர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தமிழக அமைச்சரவையில் 10 சதவீதம் கூட இல்லை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News