தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் கமல்ஹாசன் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்- கூட்டணியில் மாற்றம் வருமா?

Published On 2022-12-23 11:44 IST   |   Update On 2022-12-23 11:44:00 IST
  • நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

மதுரை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகம் அடைய செய்யவும் "பாரத் ஜோடா யாத்ரா" என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்து தற்போது டெல்லியை நோக்கி சென்று வருகிறது.

இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாளை (24-ந் தேதி) டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் இந்தியாவின் மாற்றம் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு தமிழகத்தின் மாற்றம் நம்மவர் அழைக்கிறார், கை கோர்ப்போம், வலு சேர்ப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட தலைவர் வியூகம் வகுத்து வருகிறார். இந்த நிலையில் தான் நாளை டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் எங்கள் தலைவரும் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேருமா? என்ற பரபரப்பு நிலவி வரும் நிலையில் மதுரை நிர்வாகிகளின் இந்த பரபரப்பு போஸ்டர்கள் கூட்டணி கனவுகளை மேலும் எகிற வைத்துள்ளது.

Tags:    

Similar News