தமிழ்நாடு செய்திகள்

'என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை' - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

Published On 2025-12-17 17:47 IST   |   Update On 2025-12-17 17:47:00 IST
  • எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை
  • உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு?

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகள் கிளம்பி, தற்போது அவர்மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையும் தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனையும் அவரே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி ( இன்று) தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் காணொலி மூலம் மதுரை ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.

தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் படிதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. தீபமேற்ற உத்தரவிட்டபிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும். உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு? உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன் எனக்கூறினார்.

மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News