2025 REWIND: இந்து முன்னணியின் 'முருக பக்தர்கள் மாநாடு' - திருப்பரங்குன்ற சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி?
- மாநாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரித் திருக்கோவில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.
- சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 'கந்த சஷ்டி கவசம்' பாடி சாதனை நிகழ்த்தினார்கள்.
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.
அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஜூன் 22-ந்தேதி அன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது. மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்ற மாநாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரித் திருக்கோவில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டை நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றங்களையும் நாடினர். இருந்தும் மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஆனால் இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவும், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து கோவில் நிர்வாகத்தை மீட்டு பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கியத் தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா குறித்து வீடியோ ஒன்று ஒளிப்பரப்பட்டன.
சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 'கந்த சஷ்டி கவசம்' பாடி சாதனை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநாட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் முன் மகா தீபாராதனை நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி தீர்மானம் நிறைவேற்றம் மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சியின் கொள்கை தலைவர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நேரம் அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவிக்காததும் சர்ச்சையானது.
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவும், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் அண்மையில் நடைபெற்று வரும் திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்றே கூறலாம்.
இதற்கு முன்னதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் பழனியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.