தமிழ்நாடு

சவுமியா அன்புமணி பேத்திக்கு கல்யாணமா? - சர்ச்சையான அண்ணாமலையின் வாரிசு அரசியல் பேச்சு

Published On 2024-03-26 09:30 GMT   |   Update On 2024-03-26 10:35 GMT
  • சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
  • அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது

பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.

இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.

மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News