தமிழ்நாடு

வாலிபருக்கு ஆபாச படம் மூலம் மிரட்டல்: சீனா லோன் செயலி அதிகாரி கைது

Published On 2024-03-16 05:23 GMT   |   Update On 2024-03-16 05:23 GMT
  • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
  • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News