தமிழ்நாடு

அரசு டவுன் பஸ் கண்ணாடி உடைப்பு குடிபோதையில் தொழிலாளி அட்டுழியம்

Published On 2024-01-05 07:16 GMT   |   Update On 2024-01-05 07:16 GMT
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
  • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News