தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தூத்துக்குடி, நெல்லையில் பிரசாரம்

Published On 2024-03-26 04:36 GMT   |   Update On 2024-03-26 04:36 GMT
  • எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
  • இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

அதன்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று மாலை தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை வரும் எடப்பாடி பழனிசாமி, டவுன் வாகையடி முனையில் வைத்து நெல்லை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் காரில் கன்னியாகுமரி புறப்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டவுன் வாகையடி முனையில் நடைபெறும் கூட்டத்திற்காக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகையையொட்டி டவுன் ரதவீதியில் மாலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரதவீதிகளில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News