தமிழ்நாடு

டிரைவர்கள், கண்டக்டர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும்- கடும் நடவடிக்கை என அரசு எச்சரிக்கை

Published On 2024-02-15 07:32 GMT   |   Update On 2024-02-15 07:32 GMT
  • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

சென்னை:

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News