தமிழ்நாடு

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக மனு

Published On 2024-04-07 14:18 GMT   |   Update On 2024-04-07 14:18 GMT
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
  • பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - திமுக

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்நிலையில், நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

நெல்லை மாநகர திமுக வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலான வழக்கறிஞர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சோனாளி பொன்ஷே வயங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வேட்பாளரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News